பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடி *கணபதி* வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடி *கணபதி* வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
மேற்குறித்த "பிடியதன் உரு உமை" திருப்பாடல் திருஞானசம்பந்தரின் முதல் திருமுறையில் 123 ஆவது திருப்பதிகத்தில் ஐந்தாவது திருப்பாடலாக காணப்படுவது.
இத்திருப்பதிகம் வியாழக்குறிஞ்சி என்னும் இராப்பண் ஐந்தாவதாக, நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனுக்கு, நாழிகை 45 முதல் 48 3/4 வரையிலான நேரத்தில் (24.00-0130) பாடத்தக்கதாம்.
இதன் பொருள்: மிகுதியாக வழங்கும் கொடையே தமக்கு அழகைத்தரும் என நினையும் வள்ளல் பெருமக்கள் வாழும் திருத்தலம் திருவலிவலம்.
இது காவிரித் தென் கரையில் 121ஆவது திருத்தலமாக திருவாரூர்-திருத்துறை பூண்டி பாதையில் கீவளூர் சாலையில் உள்ளது.
இங்கு உள்ள இறைவன் ஆகிய மனத்துணை நாதர் ஆண் யானை (கரி) வடிவு கொண்டு, அம்மை மாழையங்கண்ணி பெண் யானை (பிடி) வடிவு கொள்ள, தன் திருவடிகளை வழிபடும் அடியவர்களின் இடர்களைக் களைய வேண்டி, கணங்களுக்கு எல்லாம் பதியாக, கணபதி வருவதற்குத் திருவுள்ளம் பற்றி அருள் புரிந்தார் என்பதாம். என்னே அவரின் கருணைத்திறம்...!
இத்திருப்பதிகம் குறித்த தெய்வச் சேக்கிழாரின் பெரிய புராணப்பாடல் - 12 (திருஞானசம்பந்தர்) 515:
மல்லல் நீடிய வலிவலம் கோளிலி முதலாத்
தொல்லை நான்மறை முதல்வர் தம் பதி பல தொழுதே
எல்லையில் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழப் போந்தார்.
"இடர் கடி கணபதி வர அருளினன்" என்னும் திருஞான சம்பந்தரின் திருவாக்கிற்கு இசைய "அல்லல் தீர்ப்பவர்" என்னும் பெரிய. புராணத் திருவார்த்தையை எண்ணி எண்ணி இன்புறலாம்...!
இப்படி எந்த தேவாரப் பாடலை எடுத்தாலும் அதற்குரிய பண்ணைத் தெரிய முனைந்தால், அதற்கான இசை மயக்கத்திலே மாயைதனை உதறலாம்.
திருத்தலம் பற்றிய விவரங்களை அறிய முற்பட்டால், தலப்பயணத்தில் நாட்டம் கொண்டு வல்வினையை சுடலாம்.
திருப்பதிகத்திற்கு உரிய பெரிய புராணப் பாடலை வரலாற்று முறையில் உணரத் தொடங்கினால் அவர்கள் பெருமை தெரிய,நம்முடைய சிறுமை புரிய, மலம் (ஆணவம்) சாய அமுக்கலாம் அன்றோ...!
மாயைதனை உதறி வல்வினையை சுட்டு மலம்
சாய அமுக்கி அருள்தான் எடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவை தான் அழுத்த்ல் தான்
எந்தையார் பரதம் தான்.
இது மனவாசகம் கடந்தாரின் "உண்மை விளக்கம்"வெண்பாப் பாடல் ( 36 ) ஆகும்.